எலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்... இலவசமாகவே மாற்றலாம்

எலெக்ட்ரானிக் வடிவத்தில் பாலிசிகள்... இலவசமாகவே மாற்றலாம்!


இன்ஷூரன்ஸ் பாலிசி பத்திரங்களைப் பத்திரமாக வைத்து பாதுகாப்பது மிகப் பெரிய வேலை. சில சமயங்களில் இந்த பாலிசி பத்திரங்கள் கிழிந்துவிடும். சில சமயங்களில் பாலிசி பத்திரங்கள் காணாமலேகூட போய்விடும்.

 இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வாக இன்ஷூரன்ஸ் பாலிசிகள் அனைத்தையும் டீமேட் வடிவத்தில், அதாவது எலெக்ட்ரானிக் வடிவத்தில் மாற்ற உத்தரவிட்டது  இன்ஷூரன்ஸ் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ஐஆர்டிஏ.

கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதமே அனைத்து இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் டீமேட் கணக்கு கொண்டுவர வேண்டும் என ஐஆர்டிஏ திட்டமிட்டது. இதற்காக என்எஸ்டிஎல் டேட்டாபேஸ் மேனேஜ்மென்ட், சென்ட்ரல் இன்ஷூரன்ஸ் டெபாசிட்டரி, ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் புராஜெக்ட், கேம்ஸ் ரெப்பாசிட்டரி சர்வீஸ், கார்வி இன்ஷூரன்ஸ் ரெப்பாசிட்டரி ஆகிய ஐந்து நிறுவனங்களை நியமித்தது. இந்த ரெப்பாசிட்டரிகளின் கீழ் செயல்படும் முகவர்கள் மூலமாக இன்ஷூரன்ஸ் டீமேட் கணக்கைத் துவங்கலாம் என ஐஆர்டிஏ சொன்னாலும், இந்த வேலை வேகமாக நடக்கவில்லை.

எனவே, கடந்த இரு மாதங்களில் ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் தங்களின் மொத்த பாலிசி எண்ணிக்கையில் 5 சதவிகிதம் அல்லது 1,000 பாலிசிகளை எலெக்ட்ரானிக் வடிவத்தில் மாற்ற வேண்டும்  என அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் ஐஆர்டிஏ உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்போது அந்த வேலை  வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது.



இந்த ரெப்பாசிட்டரிகளிடம் டீமேட் கணக்கு ஆரம்பித்து, இன்ஷூரன்ஸ் பத்திரங்களை எலெக்ட்ரானிக் வடிவில் மாற்றுவதில் உள்ள வசதி குறித்து கேம்ஸ் ரெப்பாசிட்டரி சர்வீஸ் நிறுவனத்தின் சிஇஓ எஸ்.வி.ரமணனிடம் கேட்டோம்.

“பெரும்பாலான லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் நீண்ட காலத்தின் அடிப்படையில் இருக்கும். முதலீடு நோக்கில் மணிபேக், எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுத்து வைக்கிறார்கள். இதில் பலர் பாலிசி எடுத்ததை வீட்டுக்குத் தெரிவித்திருக்க மாட்டார்கள். பிரீமியம் செலுத்தும் தேதி, முதிர்வு தேதி ஆகியவற்றை மறந்துவிடுவார்கள். இதனால் உரிய தேதியில் பிரீமியம் செலுத்தாமல் பாலிசி ரத்தாகி இருக்கும். முதிர்வு தேதி தெரியாததால் முதிர்வு தொகையை க்ளைம் செய்ய முடியாமல் போகும். இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வு காண்பதுதான் டீமேட் இன்ஷூரன்ஸ்.

இன்ஷூரன்ஸ் பாலிசிகள் நீண்ட காலத்துக்கானவை என்பதால் அதனுடைய பத்திரத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். இது பலராலும் முடிவதில்லை. இதனால் பல சிக்கல்களை பாலிசிதாரர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இன்ஷூரன்ஸ் பாலிசிகளை டீமேட் செய்துவிட்டால், இந்தச் சிக்கல் இருக்காது.

மேலும், வெவ்வேறு இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் வைத்திருக்கும் அனைத்து பாலிசிகளையும் ஒரே டீமேட் கணக்கில் கொண்டு வந்துவிடலாம். இதனால் ஒரே கணக்கில் பாலிசி தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். அதாவது, பாலிசியின் கவரேஜ் தொகை, பாலிசி காலம், நாமினி, பிரீமியம் செலுத்தும்விதம் ஆகிய அனைத்தும் இருக்கும்.

ஒருவர் ஒரு இன்ஷூரன்ஸ் டீமேட் கணக்கை மட்டும்தான் துவங்க முடியும். கணக்கு வைத்திருக்கும் ரெப்பாசிட்டரி யின் சேவை பிடிக்கவில்லையெனில் வேறு ரெப்பாசிட்டரிக்கு கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.



 கேஒய்சி சிக்கலுக்குத் தீர்வு!

முகவரி மாறிச் செல்லும்போது இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு முகவரி மாற்றத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்கு ஆதாரமாக முகவரிக்கான சான்று தரவேண்டும். நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி வைத்திருந்தால் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தக் கடிதத்தை அனுப்ப வேண்டும். இனிமேல் அந்தச் சிக்கல் இருக்காது. டீமேட் கணக்கு வைத்திருக்கும் ரெப்பாசிட்டரிக்கு மட்டும் முகவரி மாற்றத்தைத் தெரிவித்தால் போதும். நாங்கள் பாலிசி வைத்திருக்கும் அனைத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் தெரிவித்துவிடுவோம்.

பிரீமியம் செலுத்தும் தேதிக்கு ஒரு வாரத்துக்குமுன் எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும், எந்த தேதியில் செலுத்த வேண்டும் என்பது குறித்து மெயில் மற்றும் எஸ்எம்எஸ் அனுப்பி விடுவோம். ரெப்பாசிட்டரியின் இணையதளத்தில் அனைத்து இன்ஷூரன்ஸ் கம்பெனியின் பிரீமியத்தையும் செலுத்திவிடலாம். இப்படிச் செய்யும்போது ஒரே பாஸ்வேர்டு, யூஸர் ஐடி வைத்திருந்தால் மட்டும் போதும். மேற்கூறிய அனைத்து சேவைகளும் பாலிசிதாரர்களுக்கு இலவசமாகவே கிடைக்கும்” என்றார்.

 டீமேட் தொடங்கிய எல்ஐசி!

இதைப் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்ட நிலையில் நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இப்போது இதற்கான வேலையை ஆரம்பித்துள்ளது. இன்ஷூரன்ஸ் பாலிசியை டீமேட் வடிவத்தில் மாற்றுவதற்காக 5 ரெப்பாசிட்டரிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.



எல்ஐசியில் சுமார் 30 கோடிக்கு மேற்பட்ட பாலிசிகள் உள்ளன. எல்ஐசி நிறுவனத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பவர்கள் எலெக்ட்ரானிக் வடிவத்தில் தங்களுடைய பாலிசியை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து வாடிக்கையாளர் சேவை மைய மண்டல மேலாளர் வி.விஜய ராகவனிடம் கேட்டோம்.

“பாலிசிதாரர்கள் டீமேட் கணக்கு ஆரம்பித்து அதற்கான ஆதாரத்தை எங்களிடம் கொண்டுவந்து கொடுத்தால், அதை நாங்கள் பதிவு செய்வோம். புதிய பாலிசிகள் வழங்கும்போது அந்த டீமேட் கணக்கில் வரவு வைப்போம்.

 பாலிசிதாரர்கள் பலரும் இதைச் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது முன்னோடி திட்டமாகச் செயல்படுத்துவதால், இந்த 5 ரெபாசிட்டரிகளிடம் டீமேட் கணக்குத் துவங்குபவர்கள் துவங்கலாம் எனவும் எல்ஐசி தெரிவித்துள்ளது” என்றார்.

என்றாலும், எல்ஐசியைப் பொறுத்தவரை படிக்காத மக்களும் பாலிசி வைத்திருக்கிறார்கள். இவர்கள் டீமேட் கணக்கு ஆரம்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரி தெரியவில்லை.

 ரெப்பாசிட்டரி கட்டணம்!

இன்ஷூரன்ஸ் பாலிசிகளை டீமேட் வடிவத்தில் மாற்றும் ரெப்பாசிட்டரி களுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, பாலிசியை எலெக்ட்ரானிக் வடிவத்தில் வழங்குவதால் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு செலவு குறையும். அதாவது, பாலிசி பத்திரம் அச்சடிப்பது, ஸ்டாம்ப் ஒட்டுவது, பாலிசியைத் தபாலில் அனுப்புவது போன்ற செலவுகள் இருக்கும்.
ஆனால், டீமேட் வடிவத்தில் மாற்றும்போது இதற்கான செலவு இருக்காது. எனவே, ரெப்பாசிட்டரி களுக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் கட்டணம் வழங்கும். அதாவது, புதிய பாலிசிகளுக்கு 60 ரூபாயும், பழைய பாலிசிகளுக்கு 40 ரூபாயும் கட்டணமாக வழங்க வேண்டும் என ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.